தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, உணவுக்கான உப்பு உற்பத்தி இந்தப் பகுதிகளில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இந்த உப்பளத் தொழிலை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், கோவளம் கடற்கரைப் பகுதியில் ஏராளமான மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கொரிய நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படக் கூடாது என உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பல் கட்டும் தளத் திட்டத்தை இந்தப் பகுதியில் கைவிட்டு, மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்தத் திட்டம் கைவிடப்படாவிட்டால் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை கோவளம் பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பளங்களுக்குள் இறங்கி, கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கப்பல் கட்டும் தளத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழக முதல்வர் விஜய் இதுகுறித்து சட்டமன்றத்தில் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், இல்லை யெனில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சேகர், பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்பிரமணியன், பால்ராஜ், எல்.ஆர். சிவாகர், தொழிற்சங்க நிர்வாகி பேச்சிமுத்து உள்ளிட்டோர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.