பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்’ என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
முதற்கட்டமாக, தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, தெற்கு காட்டன் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதையடுத்து, திருச்செந்தூர் சாலையில் உள்ள காமராஜர் கல்லூரிக்கு சென்ற வேலூர் இப்ராஹிம், மாணவ, மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது போதைப்பொருட்களின் தீமைகள், மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பது மற்றும் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் சந்திக்கும் சிவன் கோவில் தேரடி பகுதியில் ‘போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன், தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், மசானம், சிவராமன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைச் செல்வன் உள்ளிட்ட பல்வேறு அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் இணைத்து பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றன.