எனது தந்தையார் பின்பற்றிய வழியில், தொழிலாளர்களின் நலனை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் இடையே கூலி உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டூவிபுரத்தில் உள்ள தன்பாடு உப்பு ஏற்று மதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயரும், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி, தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பொன்பாண்டி, செயலாளர் தேன்ராஜ் மற்றும் பொருளாளர் ரெங்கநாதன் ஆகியோருடன் கலந்துரை யாடினார்.



இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூலி உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதற்காக உப்பு பாக்கெட் பண்டல் கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சங்கத் தலைவரும் மேயருமான ஜெகன் பெரியசாமிக்கு போல்பேட்டை அலுவலகத்தில் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.



அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:



“எனது தந்தையார் தூத்துக்குடியில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அந்தக் காலத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பேசி தீர்வு கண்டு வந்தார்.



தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, தொழிலதிபர்களின் தொழில்களும் தடையின்றி நடைபெறுவதற்கு ஒரு பாலமாக செயல்பட்டார்.‌ அவரது மறைவிற்குப் பிறகு கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்தப் பொறுப்புகளை தொடர்ந்து ஏற்று, பல்வேறு தொழிற் சங்கங்களில் பணியாற்றி வருகிறேன்.



தற்போது பருமணி உப்பு பண்டல், தூள் உப்பு பண்டல், பிரஸ்ஸிங் பருமணி உப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 27.08.2026 முதல் 26.08.2028 வரை இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மகிழ்ச்சியான நிகழ்வாகும்.



தொழிலாளர்களும் தொழில் நிறுவனங்களும் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையாக செயல்பட்டால், தூத்துக்குடி உப்பு உலக நாடுகள் முழுவதும் சென்று புகழ் பெறுவது போல, நமது தூத்துக்குடிக்கும் மேலும் பெருமை கிடைக்கும்.



தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் நலனும் முக்கியம் என்பதை உணர்ந்தே தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை” என்றார்.



நிகழ்ச்சியில் மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் சுசீ. ரவிந்திரன், சங்க பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் ராஜசேகர், அந்தோணி ராஜ் என்ற கண்ணன், மகேஷ், துணைச் செயலாளர்கள் பட்சிராஜா, சுரேஷ், மாடசாமி, ஆலோசகர்கள் தங்கமணி, பாண்டி, விக்டர், ஹரிராமன், செல்வக்குமார், ரமேஷ், அந்தோணி, சிவா ஆனந்த், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் முனியசாமி, மாரிமுத்து, மாடசாமி, செல்வம், பெரியசாமி, ஐயப்பராஜா, ஞானராஜ் மற்றும் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.