தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 50-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி பிரச்சினை களுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, 50-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில், அமுதா நகர் மெயின், அமுதா நகர் 4-வது தெரு, ஸ்ரீராம் நகர் 2-வது தெரு, ஸ்ரீராம் நகர் 3-வது தெரு மற்றும் எஸ்.ஆர். நகர் மெயின் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், கணேசன் காலனி 1-வது தெரு மேற்குப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கவும், கிருபை நகர் பகுதியில் சேதமடைந்துள்ள ஸ்மார்ட் வால்வை சரிசெய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாந்தி நகர் 1-வது தெரு மேற்குப் பகுதியில், 3B/384A, 3B/384B, 3B/384C, 3B/384D, 3B/384E ஆகிய கதவு எண்களைக் கொண்ட 5 வீடுகள் அமைந்துள்ள குறுக்குச் சந்துக்குள் பேவர் பிளாக் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
50-வது வார்டில் பொதுமக்களின் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய குடிநீர் குழாய் உடைப்பு, சாலை சேதம், ஸ்மார்ட் வால்வு பழுது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் கேட்டுக் கொண்டார்.