எப்போது தேர்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மீண்டும் அமோக வெற்றி பெறும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி பேசினார்.



ராமநாதபுரம் மாவட்ட திமுக அமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பான மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் பரமக்குடி கே.கே. மஹாலில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.



கூட்டத்தில் திமுக தலைமை கழக பிரதிநிதியாக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 76 ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் மிகப்பெரிய இயக்கமாக திமுக திகழ்கிறது. தற்போது கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.



திமுகவின் வரலாறு தெரியாமல் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் இருப்பதே இதற்கு காரணம்.



கடந்த 120 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. மேலும், விஜய் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அந்தக் கட்சியின் முதல்வருக்கு தெரியுமா அல்லது மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. திமுக ஆட்சியில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில், யாரையும் புறக்கணிக்காமல் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக இருந்ததை தற்போது பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டது தவறு என்ற எண்ணமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.



திமுக தலைமை எடுக்கும் முடிவுகளுக்கும், அறிவிக்கும் போராட்டங்களுக்கும் கட்சியினர் எப்போதும் களப்போராளிகளாக இருந்து செயல்பட வேண்டும். அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சித் தலைவர் அறிவிக்கும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். அதேபோல், எப்போது தேர்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக மீண்டும் அமோக வெற்றி பெறும்.



அனைத்து தரப்பினரும் நம் பக்கம் உள்ளனர். இந்த வாய்ப்பை கட்சியினர் பயன்படுத்திக்கொண்டு திமுக தலைவருக்கு வலுசேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஜெகன் பெரியசாமி பேசினார்.



கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ. கதிரவன், முன்னாள் எம்.பி.க்கள் அன்வர் ராஜா, பவானி ராஜேந்திரன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.