தூத்துக்குடியில் தசரா திருவிழாவையொட்டி அம்மன் கோவில் சப்பரங்கள் தடையின்றி வீதியுலா செல்வதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான தசரா திருவிழா, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் பல்வேறு அம்மன் கோவில்கள் சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது சிறப்பு பூஜைகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அம்மன் சப்பர வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட கோவில் செயலாளர் கார்த்திக்ராஜா, துணைத்தலைவர் தனபாலன், தனிக்கையாளர் வழக்கறிஞர் சசிகுமார், தசரா கமிட்டியாளர்கள் சண்முகசுந்தரம், தனபாலன், முனீஸ்வரன் மற்றும் வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி பகுதிகளைச் சேர்ந்த லட்சுமணன், மோகன் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியைச் சந்தித்தனர்.
அப்போது, தசரா திருவிழாவின் போது அம்மன் சப்பரங்கள் வீதியுலா செல்வதற்கான வழித்தடங்களில் உள்ள சாலைப் பள்ளங்கள் உள்ளிட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் சீரமைத்துத் தடையின்றி சப்பரங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்குச் சொந்தமான அம்மன் கோவில்களில் தசரா திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவின்போது தினமும் சிறப்புப் பூஜைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, அம்மன் சப்பரங்களில் எழுந்தருளி அந்தந்தப் பகுதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதன் தொடர்ச்சியாக, அனைத்து கோவில்களின் சப்பரங்களும் மத்திய பாகம் காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலைச் சென்றடைந்து விழா நிறைவுபெறும்.
இந்த வழித்தடங்களில் சப்பரங்கள் எவ்வித இடையூறுமின்றிச் சென்று வருவதற்கு, சாலைகளில் உள்ள பள்ளங்களை மாநகராட்சி மூலம் சீரமைத்து சமப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சப்பரங்கள் செல்வதற்குத் தடையாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு, பக்தர்களும் கோவில் நிர்வாகிகளும் சிரமமின்றிச் சென்று வருவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழா அனைத்து தரப்பினருக்கும் மனமகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும். எனவே, தசரா திருவிழாவிற்கு மாநகராட்சி நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். சப்பரப் பேரணி செல்லும் வழித்தடங்கள் சீராக இருப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மாநகராட்சி பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.