தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அமைப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகும். தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்கும், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கும் தமிழக அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் தெரிவித்தார்.

அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் ஜே. ஜேசியா வில்லவராயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய நிர்வாகக் குழுவில் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நிர்வாகத்தின் மூலம் அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தூத்துக்குடியில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் வளர்ச்சிக்காகச் செயல்பட வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்!

தூத்துக்குடி துறைமுகம் பல்வேறு வகைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. துறைமுகத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ள நிலையில், துறைமுகத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் தொழில்களும், தொழில் நிறுவனங்களும் நலிவடையாமல் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அமைப்பதைச் சில உப்பள உரிமையாளர்கள் எதிர்த்து வருகின்றனர். இருப்பினும், கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை என்பது இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்றாகும். இதன் மூலம் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்தே எங்கள் சங்கத்தின் நிலைப்பாடு இருக்கும். அரசின் முடிவை அறிந்த பின்னர் சங்கத்தின் சார்பில் உரிய கருத்துகள் தெரிவிக்கப்படும்.

தூத்துக்குடிக்கு புதிய விமானச் சேவைகள் தேவை!

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானச் சேவைகளை இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், எதிர்பார்க்கும் வகையில் புதிய விமானச் சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகக் குழு, தூத்துக்குடியிலிருந்து கூடுதல் நகரங்களுக்கு விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பாக, சரக்கு விமானச் சேவைகள் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து செயல்படுத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்!

தூத்துக்குடிக்கு மேலும் பல தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பதே அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

முந்தைய காலகட்டத்தில் இருந்த தூத்துக்குடிக்கும் தற்போதைய தூத்துக்குடிக்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வளர்ச்சியை அடைய புதிய தொழில் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இதற்காகத் தமிழக அரசிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும், மாநகராட்சி மேயரிடமும் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி தொடர்பான எங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள், விமானச் சேவைகள் விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு எங்கள் சங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே. பிரேம் பால் நாயகம், பொருளாளர் பி. பொன்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.