தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொது அமைதியை பாதுகாக்கவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான ஆர். அருணாதேவி மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நான், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன், நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறேன். சமீபகாலமாக தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு தேவையான சுதந்திரமும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது துரிதமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, சட்டப்படி உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும், பொது அமைதியையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான தனது கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் ஆர். அருணாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.