இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஜனநாயகத் திற்கு எதிரானவை எனக் கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ் மற்றும் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய கட்சியினர், வாக்குகளைத் திருடி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.



மேலும், மத்திய அரசுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், இதற்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக காங்கிரஸும் சமீபத்தில் சென்னையில் போராட்டம் நடத்தியிருந்தது.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கட்சி குடும்பத்தினர் அனைவருக்கும் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி நன்றி தெரிவித்தார்.