தூத்துக்குடியில் வேலவன் ஸ்டோர்ஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்காக ஒப்படைக்க வேண்டிய 5 பவுன் தங்க நகையை வழங்காமல் ஏமாற்றியதாக கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, நிறுவனத்தின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் D. சோலையப்பராஜா, மாவட்ட செயலாளர் R. மகேஷ்வரன், மாவட்ட பொருளாளர் A.R. ஆனந்திபொன்ராஜ் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் செயல்பட்டு வரும் வேலவன் ஸ்டோர்ஸ் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளரான தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவர், கடந்த 11.09.2026 அன்று கடைக்கு வந்துள்ளார்.
அப்போது, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலவன் ஸ்டோர்ஸில் வாங்கிய 5 பவுன் தங்க நகை, தற்போது தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானத்தில் இருப்பதாகவும், அந்த நகையில் தங்கத்தின் தரம் குறைவாக இருப்பதாக ஆடிட்டிங்கின்போது தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நகையை உடனடியாக மீட்காவிட்டால் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் போலீசில் புகார் அளிக்கும் என தெரிவித்ததாகவும், எனவே அந்த நகையை மீட்க தன்னிடம் பணம் இல்லை என்றும் இசக்கிராஜ் கூறியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நகையை மீட்டு கடைக்கு கொண்டு வந்தால், அதன் தரம் மற்றும் எடையை சரிபார்த்து, குறைபாடு இருந்தால் அதே எடையில் புதிய நகை மாற்றித் தருவதாக வேலவன் ஸ்டோர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு, தற்போது தன்னிடம் நகையை மீட்க ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் இல்லை என்றும், அந்த தொகையை வழங்கினால் நகையை மீட்டு வந்து கடையில் ஒப்படைப்பதாகவும், நகையை சரிபார்த்த பின்னர் ரூ.4.22 லட்சத்தை மீண்டும் செலுத்திவிட்டு நகையை பெற்றுக்கொள்வதாகவும் இசக்கிராஜ் கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வார்த்தையை நம்பி, நிறுவன நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, மேலாளர் சரவணக் குமார் கடந்த 11.09.2026 அன்று இசக்கிராஜின் TMB வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை மீட்டதாக கூறி இசக்கிராஜ், அந்த நகையை வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு கொண்டு வந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு நகையின் தரம் குறித்து கடை தரப்பினர் பரிசோதனை செய்து விளக்கியபோதும், அதனை ஏற்க மறுத்த இசக்கிராஜ், கடை மேலாளருடன் தகராறில் ஈடுபட்டு, 5 பவுன் நகையை கடையில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாகவும், அதற்காக வேலவன் ஸ்டோர்ஸ் வழங்கிய ரூ.4.22 லட்சத்தையும் திருப்பிச் செலுத்தாமல் சென்றதாகவும் வணிகர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக வேலவன் ஸ்டோர்ஸ் மேலாளர் சரவணக் குமார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலையத்தில் CSR No.584/2026 பதிவு செய்யப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஒரு நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று பணத்தை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தையும் நகையையும் வழங்காமல் சென்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.4.22 லட்சத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர் சங்கத்தினர் எஸ்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் வணிகர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு, நம்பிக்கையுடன் தொழில் செய்வதில் தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“வணிகம் காப்போம்; வணிகர்களை காப்போம்” என்ற நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பண இழப்பை மீட்டுத்தர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.